பேஸ்புக்கில் ஒருவர் போடும் ஸ்டேடஸிற்கு கருத்து தெரிவிக்கும் போது/ கமெண்ட் போடுவதென்றால் பலருக்கு அதிக விருப்பம் அதிலும் போட்டோவுடன் கமெண்ட்ஸ் போடுவதென்றால் கேட்கவும் வேண்டுமா? ஆம், பேஸ்புக்கில் இனி ஒருவர் பகிரும் ஸ்டேடஸ் போன்ற விடயங்களுக்கு கமெண்ட்ஸ் செய்யும் போது படங்களுடன் கமெண்ட் வழங்க முடியும். இவ்வசதியை பேஸ்புக் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் பேஸ்புக் இணையத்தளத்திற்கு மட்டுமே இது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மொபைல் அப்ளிகேஷனில் இவ்வசதி தற்போதைக்கு இல்லையென பேஸ்புக் தெரிவித்துள்ளது.ஆனால் மொபைல் அப்ளிகேஷனில் கமெண்டுடன் கூடிய படத்தைப் பாவனையாளர்கள் பார்க்கமுடியும்.
இது இளைஞர்களை வெகுவாகக் கவரும் என பேஸ்புக் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அண்மையில் பேஸ்புக் ஹேஸ்டெக் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. ஒரு விடயம் தொடர்பான ஹேஸ்டெக்கினை கிளிக் செய்வதன் ஊடாக அது தொடர்பில் மற்றையோரின் கருத்து என்ன என்பதனை தொடர்பில் அறிந்துகொள்ளமுடியும்.
பல புதிய வசதிகளை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்போவதாக பேஸ்புக் அண்மையில் அறிவித்திருந்தது. அதன் ஓர் அங்கமாக இதனைக் கருத முடியும். இதேபோல் பேஸ்புக் ஸ்தாபகர் ஷூக்கர் பேர்க் செம்சுங் நிறுவனத்தினது முக்கிய நபர்கள் சிலரை சந்தித்து பேசியுள்ளார். செம்சுங் நிறுவனத்தின் தலைவர் குன் – ஹீ லீ, அவரது மகன் ஜே வை. லீ ஆகியோரைச் சந்தித்துள்ளார். இதைவிட முக்கியமாக ஷூக்கர் பேர்க், செம்சுங் நிறுவனத்தின் மொபைல் பிரிவின் தலைவர் சின் ஜொங்-கியுனையும் சந்தித்துள்ளார்.
பேஸ்புக்கை இலகுவாக உபயோகிக்கும் வகையிலான ஸ்மார்ட் போன்களை உருவாக்கும் படி ஷூக்கர் பேர்க், ஜொங்கிடம் வேண்டுகோள் விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.பேஸ்புக் நிறுவனத்தின் அண்மையை நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்தக் கட்ட அதிரடியான மாற்றங்களுக்கு அது தயாராகியுள்ளமையை எடுத்துக்காட்டுகின்றன. டுவிட்டர் , வைபர், வட்ஸ் எப் போன்றவற்றின் போட்டி அதிகரித்துள்ளமை, மொபைல் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றன பேஸ்புக்கின் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டுள்ளமைக்கான முக்கிய காரணங்களாக குறிப்பிடமுடியும்.
No comments:
Post a Comment