இதனை "கூடிப் பேசும் அரட்டை அறை" என்றும் சொல்லலாம். Android மற்றும் iOS இல் இந்த செயலி உள்ளது. ஒரே வகை விருப்புடையவர்கள் ஒன்றிணைய இதில் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பிரபலமான பலர் இதில் இணைந்துள்ளனர். பலர் இணைந்து தத்தமது துறை சார்ந்த விடயங்களை உரையாடி வருகின்றனர். பல தலைப்புக்களில் பல அறைகள் உருவாக்கப்பட்டு கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
சில அறைகளுக்குள் நுழைய முடியாது. அவை இரகசிய அறைகள். பல அறைகள் திறந்தே உள்ளன. அவற்றில் உங்களுக்கு விருப்பமான விடயங்கள் உரையாடப்படுகின்ற அறைகளைத் தெரிவு செய்து உள்நுழையலாம். அங்கு நிகழும் உரையாடலில் நீங்களும் இணைந்து கொள்ளலாம். அல்லது பேசுவதை கேட்டுக்கொண்டு இருக்க முடியும். ஒருவர் உரையாடலை நடத்தினாலும், யார் பேச வேண்டும் என்பதையும், யாரைக் கேட்க அனுமதிக்கலாம் என்பதையும் தீர்மானிக்கலாம். உங்கள் அறையை இரகசிய இலக்கங்களை வழங்கி மூடியும் வைக்கலாம்.
நீங்களும் அறைகளை உருவாக்கி ஆட்களை அழைக்கலாம். அதன்படி நீங்கள் பேசும் விடயத்தில் விருப்புடையவர்கள் தொடர்ந்தும் இணைந்திருப்பார்கள். விருப்பமற்றோர் அவர்களுக்கு விருப்பமான அறைகளுக்கு போய் விடுவார்கள்.
கலந்துரையாடலுக்கான சிறந்த ஒரு இடமாக இது உள்ளது. இருப்பினும், எல்லா சமூக வலை தளங்களைப் போலவும் இங்கும் சில பாதுகாப்பற்ற நிலமைகள் உள்ளன. நேர விரயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில தவறான தொடர்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அநாவசிய விடயங்கள் 'அவசியமான பேசு பொருளாகிச் செல்ல' வாய்ப்பு உள்ளது. இரகசிய மற்றும் அந்தரங்க உரையாடல்கள் இடம்பெறவும், அவை கசியவும் வாய்ப்புகள் அதிகம். இங்கே, ஒலிப்பதிவு செய்து பிறகு கேட்கும் வசதி கிடையாது. ஆனால், வேறு வழிகளில் அதனை செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
யார் பயன்படுத்தினாலும், இதில் அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் இருப்பதை உணர்ந்து, சுய பாதுகாப்பு, சுய கட்டுப்பாடு என்பவற்றைப் பேணி நல்ல விடயங்களைப் பேசவும், நல்லதைக் கேட்கவும் பயன்படுத்துவதே இங்கு மிக முக்கியமானது.
இந்த வசதி இலவசமானது. செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் தொலைபேசி இலக்கத்தை வழங்க வேண்டும். அல்லது, மின்னஞ்சல் முகவரியோ Twitter கணக்கோ கொடுத்தும் இதில் கணக்கை ஆரம்பிக்கலாம்.
பின் ஒரு OTP இலக்கம் கிடைக்கும். அதனை செலுத்தி உறுதி செய்ய வேண்டும். உங்கள் முதல் பெயர் இறுதிப் பெயர் என்பவற்றை வழங்க வேண்டும். பின் பயனர் பெயர் (User Name) ஒன்றை வழங்க வேண்டும். உதாரணமாக Twitter இல் உள்ளது போல் @isbahanlk என்று பெயர் வரும். பிறகு உங்களது Profile படம் ஒன்றை கொடுக்க முடியும்.
உங்களது User Name மற்றும் Profile Picture உடன் கணக்கு ஆரம்பமாகும். நீங்கள் இணைந்ததில் இருந்து கணக்கு செயல்பட 15 அல்லது 20 நிமிடங்கள் செல்லும். அதாவது, உங்களால் இதில் கணக்குத் தொடங்க முடியும். ஆனால், ஏற்கனவே Clubhouse இல் உள்ள ஒருவர் உங்களை உள்ளே அழைக்க வேண்டும். அப்போது தான் உங்களால் உள்ளே செல்ல முடியும். அதில் இயங்க முடியும்.
பிறகு உங்களது Instagram மற்றும் Twitter கணக்குகளை இணைக்க முடியும். அவை உஙகளது Instagram Profile Page போல் ஒரு பக்கத்தை உருவாக்கித் தரும்.
இதில் பல பகுப்புகள் காணப்படுகின்றன. விளையாட்டு, நகைச்சுவை, சினிமா என இப்படிப் பல காணப்படுகின்றன. அவற்றில் உங்களுக்கு விருப்பமானவற்றை நீங்கள் முதலிலேயே கொடுத்துவிடலாம். அதற்கேற்றாற்போல் உங்களுக்கு அறைகளை காண்பிக்கும். அல்லது உங்களை யாரும் பரிந்துரை (Suggest) செய்தால் அந்த குழுவுடன் இணைந்து உரையாடலை ஆரம்பிக்கலாம்.
இது வேகமாக வளர்ந்து வருகின்ற ஒரு செயலி. எதிர்காலத்தில், இதற்கு Facebook, Twitter போன்றே ஒரு சந்தை உருவாகுவதற்கான வாய்ப்பும் உள்ளது. தற்போது, பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு உத்தியோக பூர்வமாக அழைப்பிதழ்கள் அனுப்பி நடாத்தப்படுவதையும் அவதானிக்கலாம். உங்களது கலந்துரையாடல்களையும் இந்த Clubhouse இல் நடாத்த அதிக வசதிகள் உள்ளன. ஒரே நேரத்தில் 5000 பேர் ஒரு அறையில் நடக்கும் அமர்வில் ஒன்றிணைய இதில் வசதி உள்ளது. நேர கட்டுப்பாடு கூட கிடையாது.
எதுவும் நல்லதுக்கு பயன்படுத்தினால் நல்லது. மீறினால் சமூக சீர்குலைவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இதைப் புரிந்து நவீன தொழில் நுட்ப வசதிகளை நல்ல முறையில் பயன்படுத்துவோம். சுய ஒழுக்கங்களை மெய்நிகர் வெளிகளிலும் பேணுவோம்!
நன்றி - இஸ்பஹான்
No comments:
Post a Comment